செய்திகள்

ஜி-சாட் 11 செயற்கைகோள் ஏப்ரல்-மே மாதத்தில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Published On 2018-02-21 08:27 GMT   |   Update On 2018-02-21 08:27 GMT
இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் வசதியினை பெற ஏதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 5.7 டன் எடை கொண்ட ஜி-சாட் 11 என்ற சாட்டிலைட் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
கே.கே.நகர்:

திருச்சியில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இஸ்ரோ தலைவர் சிவன்,சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் அனைத்து மூலைமுடுக்குகளிலும் அதிவேக இண்டர்நெட் வசதியினை பெற ஏதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 5.7 டன் எடை கொண்ட ஜி-சாட் 11 என்ற சாட்டிலைட் ஏவப்பட உள்ளது. இந்தியாவில் இத்தகைய சாட்டிலைட் ஏவுவதற்கான வசதிகள் இல்லாதபட்சத்தில் பிரான்ஸ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். மேலும் மார்ச் மாத இறுதி வாரத்தில் ஜிஎஸ்எல்வி ஜிசாட்-6ஏ என்ற செயற்கைகோள் ஏவப்பட உள்ளது. அடுத்த வாரத்தில் ஒன்-ஐ என்ற செயற்கைகோளும் ஏவப்படுகிறது.

மக்களுக்கான சேவைகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய செயற்கைகோள்கள் ஏவப்படுகிறது. செயற்கை கோள்களின் காலத்தினை அதிகரிக்க எலக்ட்ரிக் புரோபசல் சிஸ்டம் என்ற நவீன முறை கையாளப்பட உள்ளது.

இஸ்ரோவின் 158 திட்டங்களில் 126 திட்டங்கள் செயல்வடிவம் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள திட்டங்களும் விரைவில் முடிக்கப்படும். இஸ்ரோ சார்பில் சாட்டிலைட் தயாரிப்பதை தனியாருக்கு வழங்க உள்ளோம். அதன் மூலம் நிறுவனங்கள் வளர்ச்சியடையும். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெற்று வாழ்வில் உயரலாம். எந்த பள்ளி, கல்லூரியில் படித்தாலும் சரி, நம்மால் சாதிக்கமுடியும் என்ற உத்வேகம் இருந்தால் வாழ்வில் முன்னேற்றத்தை அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News