செய்திகள்

ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பேட்டி

Published On 2017-11-24 12:40 GMT   |   Update On 2017-11-24 12:40 GMT
உச்சநீதிமன்றம் சென்று சட்டப்படி இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்று திருப்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற அ.தி.மு.க. அம்மா அணி ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது-

கட்சி வளர்ச்சி குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மண்டல வாரியாக நடத்த வேண்டும் என திட்டமிட்டு முதல் கூட்டம் கொங்கு மண்டலத்தின் மைய பகுதியான இங்கு நடைபெற்று உள்ளது.

இது நிர்வாகிகள் கூட்டம் என்று அறிவித்து இருந்தாலும் ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டமாக அமைந்து விட்டது.

எம்.ஜி.ஆர். இருந்த போது கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக இருந்தது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆவதற்கும் கொங்கு மண்டலம் தான் உதவியது. ஜெயலலிதா வழியில் நடக்கும் எங்களுக்கும் கொங்கு மண்டலம் உறுதுணையாக இருக்கும் என்பது உறுதி.

சில புல்லுருவிகள் கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறால் சிறை சென்று விடுவோம் என்ற அச்சம் காரணமாகவும் கிடைக்கும் வரை சுருட்டி கொள்ளலாம் எனவும் பதவி சுகத்திற்காகவும் ஒன்றரை கோடி தொண்டர்கள் பற்றி கவலைப்பட வில்லை.

இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு கவர்னரிடம் மனு அளிக்க வில்லை. இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.

கடந்த முறை ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ஓ. பன்னீர் செல்வம், மதுசூதனன் உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில் சின்னம் முடக்கப்பட்டது.

பெரும்பான்மையான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு இருந்தார்கள். ஆனாலும் சின்னம் முடக்கப்பட்டது. தற்போது பெரும்பான்மையான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக கூறி சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதில் மத்திய அரசின் பின்னணி இருப்பதாக உள்ளது. சாதிக் அலி தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது. கடந்த முறை ஆர்.கே. நகர் தேர்தல் அறிவித்த போது சின்னம் முடக்கப்பட்டது. தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போது சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதில் பெரிய சதி உள்ளது. இந்த சதியில் பாரதீய ஜனதாவுக்கு பங்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது,

ஆர்.கே. நகரில் நான் போட்டியிடுவது என நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். இரட்டை இலையை மீட்க இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட வேண்டியுள்ளது. தர்மத்தின் வாழ்வதனை சூதும் கவ்வும், ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்.

ஆர்.கே. நகரில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். உச்சநீதிமன்றம் சென்று சட்டப்படி இரட்டை இலையை மீட்டெடுப்போம். ஆட்சி மன்ற குழு என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. இரட்டை இலையை எதிர்த்து தொப்பி சின்னத்தில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News