செய்திகள்

தினகரன் பண்ணை வீட்டில் இன்று 2-வது நாளாக வருமான வரி சோதனை

Published On 2017-11-10 05:56 GMT   |   Update On 2017-11-10 05:56 GMT
தினகரனின் பண்ணை வீட்டில் பாதாள அறையை திறக்க முடியாததால் அதற்கு சீல் வைத்துவிட்டு சென்ற அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

தமிழ்நாடு முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். புதுவையில் ஆரோவில் அருகே தினகரனின் பண்ணை வீடு உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் நேற்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

முதலில் 4 அதிகாரிகள் வந்தனர். பின்னர் மதியம் மேலும் 2 அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினார்கள். இந்த வளாகத்தில் ஒரு பெரிய வீடும், ஒரு சின்ன வீடும் உள்ளது. பெரிய வீட்டின் அடிப்பகுதியில் பாதாள அறைகள் இருந்தன. அதில் 2 அறை தனித்தனியாக பிரித்து அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறைகள் எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் பூட்டப்பட்டிருந்தது. அதற்கு ரகசிய குறியீடுகள் இருந்தால் தான் திறக்க முடியும்.

இதனால் அவற்றை வருமான வரி அதிகாரிகளால் திறக்க முடியவில்லை. எனவே மேலும் ஒரு அதிகாரியை வரவழைத்தனர். அவர் இரவு தினகரன் வீட்டுக்கு வந்தார். பின்னர் அறையை திறக்காமலேயே அதற்கு சீல் வைத்துவிட்டு புறப்பட்டனர்.

இரவு 8 மணி அளவில் வருமான வரி அதிகாரிகளின் கார் வெளியே வந்தது. காரின் உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. தினகரன் வீட்டில் இருந்து பல்வேறு பொருட்களை காரில் ஏற்றி எடுத்து சென்றுள்ளனர். அவற்றில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News