செய்திகள்

புதுவை அரசு தொடக்க பள்ளிகளில் 201 நிரந்தர ஆசிரியர் பணியிடம் ரத்து

Published On 2017-10-23 09:48 GMT   |   Update On 2017-10-23 09:48 GMT
மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் புதுவை அரசு தொடக்க பள்ளிகளில் 201 நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை அரசு ரத்து செய்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை அரசுப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு முன் மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஜூனியர் காலேஜ், சிறப்புப் பள்ளிகள் என மொத்தம் 710 பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் 285 முன் மழலையர் பள்ளிகள், 239 தொடக்கப் பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 74 உயர்நிலைப் பள்ளிகள், 59 மேல்நிலைப்பள்ளிகள், ஒரு ஜூனியர் காலேஜ், 3 சிறப்புப் பள்ளிகள் அடங்கும்.

இந்த பள்ளிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் குறைவாக சென்றுவிட்டது. அரசு அதிக அளவில் கல்வித்துறைக்கு நிதியை ஒதுக்கி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதற்கு ஏழை பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதே காரணம். மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்தாலும், ஆசிரியர் விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. குறைந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். இது கல்வித் துறைக்கு நிதி சுமையை ஏற்படுத்தி வருகிறது.

எனவே நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது. இதன்படி 201 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை அரசு ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக நிலை 2 தகுதியுள்ள 201 பாலசேவிகா பணியிடங்களை உருவாக்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இனி தங்களுக்கு வேலை கிடைக்குமா? என்று அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
Tags:    

Similar News