செய்திகள்

மகளிர் மட்டும் முகநூல் குழுவின் முதலாமாண்டு நிறைவு: முக்கிய நகரங்களில் ஒன்றுகூடிய பெண்கள்

Published On 2017-10-19 03:21 GMT   |   Update On 2017-10-19 03:21 GMT
மகளிர் மட்டும் முகநூல் குழுவின் முதலாமாண்டு நிறைவையொட்டி, குழுவில் இடம்பெற்றுள்ள பெண்கள் முக்கிய நகரங்களில் ஒன்றுகூடி தங்கள் குழுவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை:

உலகின் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை இணைக்கும் வகையில், பெண்களால், பெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் “மகளிர் மட்டும்” எனும் முகநூல் குழு முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இந்தியாவில் சென்னை, கோவை, மதுரை,
ஈரோடு, பெங்களூர் மற்றும் துபாய், மஸ்கட் ஆகிய இடங்களில் ஒரே நாளில் சிறப்பாக நடைபெற்றது.

“பொழுது போக்கு மட்டுமே எங்கள் நோக்கமல்ல. சமூக அக்கறையுடன் பிறருக்கு உதவுவதும் எங்களின் குறிக்கோள்” என்று மகளிர் மட்டும் உதவி நிர்வாகி பெனாசிர் பாத்திமா கூறினார்.

“அடுத்த திட்டமாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் குழு உறுப்பினர்களின் உதவியுடன் தமிழகத்தில் கல்லூர் என்ற கிராமத்தை தேர்ந்தெடுத்து, தன்ணீர் இல்லாத கிணற்றை ஆழப்படுத்துவதற்காக ரூ.40,000 பண உதவி செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று மேலும் 10 விவசாயிகளுக்கு உதவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொகையை உறுப்பினர்கள் பகிர்ந்தளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், உறுப்பினர்களின் பங்களிப்பு இல்லையெனில் சமூக சிந்தனையுடன் கூடிய இது போன்ற நல்ல காரியங்களை செய்ய இயலாது” என்று அமைப்பின் நிர்வாகி வஹிதா பானு பெருமையுடன் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் வெறும் இரண்டு உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்தக் குழுவானது, இன்று 8000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த குழுவினர் வாரந்தோறும் சமையல், பாட்டு, புகைப்படம், ஒப்பனை போன்ற துறைகளில் போட்டிகளை நடத்துகின்றனர். சமூக நலன் கருதி, சாலையோரத்தில் வாழும், வசிப்பிடமில்லா ஏழைகளுக்கு அன்னதானம், இரத்த தான முகாம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News