செய்திகள்

வைகை, பல்லவன் ரெயில்களில் பொதுப்பெட்டிகளை அகற்றியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Published On 2017-10-13 10:03 GMT   |   Update On 2017-10-13 10:04 GMT
வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொது பெட்டிகள் அகற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை ஆண்டாள்புரத்தைச்சேர்ந்தவர் கார்த்தி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

வைகை மற்றும் பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தலா ஒரு பொது பெட்டியை நீக்கி விட்டு முன்பதிவு பெட்டிகளாக மாற்றி உள்ளனர்.

தீபாவளி நெருங்குவதால் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரெயில்களில் முன்பு இருந்ததைபோல பொது பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த ரெயில்களில் முன்பதிவு இல்லாத 5 பொது பெட்டிகள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் நிர்வாக வசதிக்காக நீக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரெயில்வே நிர்வாக முடிவுகளில் கோர்ட்டு தலையிட முடியாது என்று கூறப்பட்டு இருந்தது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொது பெட்டிகள் அகற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News