செய்திகள்

கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2017-09-21 07:40 GMT   |   Update On 2017-09-21 07:40 GMT
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது படகுகளும் சேதப்படுத்தப்பட்டன.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடி பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன்பிடிக்கக்கூடாது. உடனே கிளம்பிச் செல்லுங்கள் என எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர், அதில் இருந்த மீனவர்களை தாக்கினர்.

மேலும் அவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும், அறுத்து சேதப்படுத்தினர். அப்போது சில ரோந்து கப்பல்கள், மீனவர்களின் படகுகள் மீது மோதியது.

இதில் அந்தோணி என்பவரது படகு உள்பட சில படகுகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை கரை திரும்பினர். அதன் பிறகு தான் தாக்குதல் விவரம் தெரிய வந்தது.

கடந்த 10 நாட்களாக எந்தவித பிரச்சினையும் இன்றி மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தாக்குதல் சம்பவம் தொடங்கி உள்ளது பலரிடமும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News