செய்திகள்

திருவள்ளூர் அருகே மாமியார் சொத்தை ரூ.2½ கோடிக்கு அடமானம் வைத்து மோசடி: மருமகன் கைது

Published On 2017-08-22 07:25 GMT   |   Update On 2017-08-22 07:25 GMT
திருவள்ளூர் அருகே மாமியார் சொத்தை ரூ.2½ கோடிக்கு அடமானம் வைத்து மோசடி செய்த மருமகனை போலுசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கு அதே பகுதியில் நிலம் மற்றும் வீடு உள்ளது.

ஜோதியிடம், அவரது மகள் தனலட்சுமி மற்றும் மருமகன் அன்பு ஆகியோர் “எங்களுக்கு கடன் பிரச்சனை இருப்பதால் உங்களது நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.7 லட்சம் கடன் வாங்குவதாகவும், அதனை நாங்களே திருப்பி கட்டி விடுவதாகவும் தெரிவித்தனர். இதனை நம்பி ஜோதி அவர்கள் கூறிய இடத்தில் ‘கைநாட்டு’ வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அடையாறில் உள்ள வங்கி சார்பில் ஜோதியின் வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், சொத்தை அடமானம் வைத்து ரூ.2 கோடியே 47 லட்சம் வாங்கி இருப்பதாகவும், அதனை 2 மாதத்தில் கட்டவில்லை எனில் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்த ஜோதி விசாரித்த போது மகள் தனலட்சுமி, மருமகன் அன்பு ஆகியோர் மோசடி செய்து ரூ.2½ கோடிக்கு சொத்தை அடமானம் வைத்து இருப்பது தெரிந்தது.

இதற்கு அன்புவின் நண்பரான கொளத்தூரை சேர்ந்த மோகன்குமார், அவரது மனைவி சவிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

இது குறித்து ஜோதி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஜோதியை ஏமாற்றி அவரது சொத்தை அடமானம் வைத்து மோசடி நடந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து அன்புவை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News