செய்திகள்

குமரியில் காலநிலை மாற்றம்: மேக மூட்டத்தில் மறைந்த திருவள்ளுவர் சிலை

Published On 2017-08-14 06:58 GMT   |   Update On 2017-08-14 06:58 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் மேக மூட்டத்தில் மறைந்தது போல காட்சி அளித்தது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் விவேகானந்தர் மண்டபத்தை 16,379 சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்துள்ளனர். இன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகள் படகு துறையில் திரண்டு விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.

கன்னியாகுமரியில் இன்று காலையில் சூரிய உதயமானதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. காலை 9 மணி அளவில் வானில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டதால் வானும், கடலும் இணைந்தது போல் காட்சி அளித்தது. மேலும் மேக மூட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபமும் முழுவதும் மறைக்கப்பட்டது.

இதனால் கடற்கரையில் இருந்து பார்த்தபோது திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் மாயமாக மறைந்தது போல காட்சி அளித்தது. இதை பார்த்ததும் சுற்றுலாபயணிகள் தங்கள் செல்போன்களில் அதை படம் பிடித்து ரசித்தனர்.

மேலும் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற படகும் கடலில் சிறிது தூரம் சென்றதும் மேக மூட்டத்தில் மறைந்தபடி சென்றதால் அதில் சென்ற சுற்றுலா பயணிகள் அதை ரசித்தபடி பயணம் செய்தனர்.
Tags:    

Similar News