செய்திகள்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை: 31-ந் தேதி தாயகம் திரும்புகிறார்கள்

Published On 2017-07-29 05:19 GMT   |   Update On 2017-07-29 05:19 GMT
இலங்கை அரசு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் விடுதலை செய்துள்ளது. 77 மீனவர்களும் வருகிற 31-ந் தேதி காரைக்கால் துறைமுகத்துக்கு வந்து சேருகிறார்கள்.
ராமேசுவரம்:

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். 160-க்கும் மேற்பட்ட படகுகளும் சிறை பிடிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடந்த அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இலங்கை அரசு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் (மொத்தம் 77 மீனவர்கள்) விடுதலை செய்துள்ளது.

இதில் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரும், நம்புதாளை மீனவர்கள் 6 பேரும், மண்டபம் மீனவர்கள் 12 பேரும், புதுக்கோட்டை மீனவர்கள் 18 பேரும், காரைக்கால் மீனவர்கள் 17 பேரும், நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேரும் அடங்குவர்.

இவர்கள் இலங்கை கடற்படையினரால், இந்திய காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அதன்பின்னர் 77 மீனவர்களும் வருகிற 31-ந் தேதி காரைக்கால் துறைமுகத்துக்கு வந்து சேருகிறார்கள்.

மீதியுள்ள 18 பேர் (கோட்டைப்பட்டினம்-2, நாகப்பட்டினம்-8, நம்பு தாளை-4) அடுத்த கட்டமாக விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.



Tags:    

Similar News