செய்திகள்
உடலில் திருநீறு பூசி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சேவை இயக்கத்தினர்.

கதிராமங்கலத்தில் உடலில் திருநீறு பூசி நூதன போராட்டம்

Published On 2017-07-26 04:10 GMT   |   Update On 2017-07-26 04:10 GMT
கதிராமங்கலத்தில் மக்கள் சேவை இயக்கத்தினர் உடலில் திருநீறு பூசி மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளை வேற்று கிரகவாசிகளாக பாவித்து பாராமுகம் காட்டி வருகின்றன என நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் ஊரை விட்டு வெளியேறி அங்குள்ள அய்யனார் கோவில் தோப்பில் குடியேறி போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று 15-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 60 பேர் பங்கேற்றனர்.

அப்போது கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது மக்கள் சேவை இயக்கத்தின் அகில இந்திய தலைவர் தங்க. சண்முக சுந்தரம் உள்ளிட்ட 4 பேர் உடல் முழுவதும் திருநீறு பூசி மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளை வேற்று கிரகவாசிகளாக பாவித்து பாராமுகம் காட்டி வருகின்றன என நூதன முறையில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டனர். இன்று 16-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.





Tags:    

Similar News