செய்திகள்

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Published On 2017-07-12 12:37 GMT   |   Update On 2017-07-12 12:37 GMT
11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசாணையை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை:

மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் தமிழக அரசு கடந்த மே மாதம் 22-ந் தேதி பதினோராம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசாணையை வெளியிட்டுள்ளது.

இது தேவையற்ற ஒன்று. 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் தூக்கமின்றி கடினமாக உழைக்கின்றனர். அதற்காக தனியே டியூசனுக்கும் செல்கின்றனர். இதே போலவே 12-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்கின்றனர்.

இந்நிலையில் 11-ம் வகுப்பும் பொதுத்தேர்வு என்ற அரசாணையால் மாணவர்களும், அவரது பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். 10, 11, 12 ஆகிய 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கும், விரக்தி நிலைக்கும் ஆளாவர்.

எனவே 11-ம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக நடத்த வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போட்டிச்சூழல் அதிகமிருக்கும் நிலையில், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக 2 ஆண்டுகளும் 12-ம் வகுப்பு பாடத்தை பயில்கின்றனர்.

இதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்கல்வி பயிலும் மாணவர்களும், முதலாம் ஆண்டில் சிரமப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தரப்பு வல்லுநர்களும் தெரிவித்தனர். அதனடிப்படையில், வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆலோசித்து அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கினை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News