செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்க தடைகோரிய வழக்கு தள்ளுபடி

Published On 2017-06-28 03:04 GMT   |   Update On 2017-06-28 03:04 GMT
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்க தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து அந்த மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ‘சிப்காட் நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து நாள்தோறும் 48 லட்சத்து 66 ஆயிரத்து 700 லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் விவசாயிகள் பாதிக்கப்பட்டதோடு, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தீர்ப்பை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் கூறியிருப்பதாவது:-

“இதுதொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலும், நீர்வள ஆதார அமைப்பின் தகவல்களின் அடிப்படையிலும் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர் வழங்குவது தொடர்பான அரசின் நிபுணத்துவம் மீது கோர்ட்டு கவனம் செலுத்த முடியாது என்றும், விதிகள் சரியாக பின்பற்றப்படாதபோது மட்டுமே தலையிட முடியும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க நீர் பயன்பாட்டுக்குழு அனுமதித்து அளித்துள்ளது.

இந்த வழக்கில், கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தவிர்த்து மற்ற விதிமீறல்கள் குறித்து மனுதாரர் தரப்பில் தெளிவாக கூறப்படவில்லை. தண்ணீர் வரத்து, தண்ணீர் பயன்பாடு குறித்து அதிகாரிகளால் மட்டுமே முடிவு செய்ய முடியும். ‘தாமிரபரணியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும் அல்லது குறைக்கப்படும்’ என பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மனு மூலம் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தண்ணீர் பயன்பாடு தொடர்பாக முடிவெடுப்பது சிக்கலான ஒன்று. இந்த விஷயத்தில் கோர்ட்டு உரிய நிபுணத்துவம் பெறவில்லை. சிப்காட்டில் சிமெண்ட், டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News