செய்திகள்

சொந்த மாவட்டத்தில் கூட ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கு இல்லாதவர்: தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.தாக்கு

Published On 2017-05-29 10:26 GMT   |   Update On 2017-05-29 10:26 GMT
சொந்த மாவட்டத்தில் கூட ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கு இல்லாதவர் என தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மதுரை:

சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு கோரி மதுரை காளவாசலில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 3-வது நாளாக இன்று போராட்டம் நீடித்தது.

இந்த போராட்டத்தை உடனடியாக கைவிடக்கோரியும், பிரதிநிதிகளை அரசிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. போராட்டக்குழுவினருடன் இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் செம்மலை அரசு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று புகார் கூறி இருக்கிறார். அரசு விழாவிற்கு எம்.எல். ஏ.வை அழைப்பது முதலமைச்சரின் வேலை அல்ல.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலமாகத்தான் அழைப்பு விடுப்பார்கள். விழா அழைப்பிதழில் அவரது பெயர் போடப்பட்டுள்ளது. ஆனால் விழாவில் பங்கேற்காமல் அரசு மீது செம்மலை வீண் பழி சுமத்துகிறார்.


ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி இயங்கும் என்று அறிவித்தால் தான் இணைப்பு சாத்தியமாகும் என்று செம்மலை கூறி இருக்கிறார். அவரது கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

அ.தி.மு.க.வில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் அவராகவே பிரிந்து சென்றார். எனவே அவர் தான் மீண்டும் வந்து சேர வேண்டும். தேனி மாவட்டத்தில் கூட அவருடன் யாரும் செல்லவில்லை.

சொந்த ஊரிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஒரு ஆண்டு முதல் அமைச்சராக இருந்த அவர் எந்த கோப்புகளிலும் கையெழுத்து இடவில்லை.

ஆனால் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி ஊழல் ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். அதை அவர் நிரூபித்து காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News