செய்திகள்

வங்காள தேசம் நோக்கி ‘மோரா’ புயல் நகர்கிறது: தமிழக துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

Published On 2017-05-29 09:51 GMT   |   Update On 2017-05-29 09:51 GMT
வங்க கடலில் உருவான ‘மோரா’ புயல் வங்காள தேசம் நோக்கி நகர்கிறது. தமிழக துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை:

தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. நேற்று காலை 5.30 மணிக்கு அது புயலாக மாறியது.

இந்த புயலுக்கு ‘மோரா’ என பெயரிடப்பட்டுள்ளது. மோரா புயலானது கிழக்கு மத்திய வங்க கடலில் மையம் கொண்டு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது கொல்கத்தாவுக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 750 கி.மீ. தொலைவிலும், வங்காளதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து 660 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

‘மோரா’ புயல் மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30-ந்தேதி) பிற்பகலுக்கு மேல் சிட்டகாங் துறைமுகம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அசாம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகலாயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 6.30 மணிக்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சூறாவளி காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

‘மோரா’ புயானது வட கிழக்கு திசை நோக்கி நகரும் போது நிலப்பரப்பில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும் என்பதால் தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News