செய்திகள்

ஊத்துக்கோட்டை பகுதியில் சூறைகாற்றுடன் மழை: மின்கம்பங்கள் சரிந்ததில் 13 கிராமம் இருளில் மூழ்கியது

Published On 2017-05-23 08:04 GMT   |   Update On 2017-05-23 08:04 GMT
ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்று சூறைகாற்றுடன் பெய்த மழையால் 10 மின்கம்பங்கள் சரிந்தது. இதனால் 13 கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் நேற்று மதியம் திடீர் என்று பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மதியம் 2.45 மணிக்கு தொடங்கிய மழை 3.15 மணி வரை நீடித்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன.

பலத்த காற்றுக்கு திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்த பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.

இதனால் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே போல் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் மீது மரம் சாய்ந்ததால் பெட்ரோல் ஊற்றும் கருவிகள் மற்றும் இதர பொருட்கள் சேதமடைந்தன.

அண்ணாநகரில் சுமார் 100 வருடத்திய ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் ஓட்டல் முழுவதுமாக நொறுங்கியது. இதில் ஓட்டல் உரிமையாளர் ஜான்சனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சூறாவளி காற்றுக்கு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றங்கரையில் இருந்த 10 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் மின் சப்ளை பாதிக்கப்பட்டது.

போந்தவாக்கம், அனந்தேரி, பெரிஞ்சேரி, கட்சூர், நந்திமங்கலம், புச்சேரி உட்பட 13 கிராமங்கள் இருளில் மூழ்கின. இன்று காலையும் மின்சாரம் சீராகவில்லை.

மின்வயரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மின் தடையால் மக்கள் மிகவும் அவதிபட்டனர்.

காஞ்சீபுரத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழையில் சிறு சிறு பனிக்கட்டிகளும் விழுந்தன.

பலத்த மழை பெய்ததால் காஞ்சீபுரத்தின் முக்கிய பகுதிகளில் ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News