செய்திகள்
நெல்லையப்பர் கோவிலுக்கு ஆய்வுக்கு வந்த மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் இன்று ஆய்வுக்கு வந்த தொல்லியல் அதிகாரிகளை பக்தர்கள் முற்றுகை

Published On 2017-04-29 10:30 GMT   |   Update On 2017-04-29 10:30 GMT
நெல்லையப்பர் கோவிலில் மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பக்தர்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:

அரசின் நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் ஆகம விதிப்படி புனரமைப்பின் போது தொல்லியல் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், இதற்காக குழு அமைக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் பகவான் சரத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்த குழுவில் யுனஸ்கோ பிரதிநிதிகள் திகாஸ் ஜெயின், அபூர்வா, ஜெபாசிக் நாயக் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர் இன்று நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். நெல்லையப்பர் கோவிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள தொல்லியல் விபரங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளனவா? தொல் பொருள் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது பக்தர்கள் பேரவையினர் அங்கு திரண்டு வந்தார்கள். மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். நெல்லையப்பர் கோவிலை மத்திய அரசு கையில் எடுக்கும் முயற்சியாகதான் இந்த ஆய்வு நடக்கிறது என குற்றம் சாட்டினர். கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சாத்தையா, நிர்வாக அதிகாரி ரோஷினி ஆகியோர் வந்து பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நெல்லையப்பர் கோவிலில் பழங்கால சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் மத்திய தொல்லியல் அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். இதை தொடர்ந்து பக்தர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அடையாளங்களை அறநிலைய துறை அதிகாரிகள் காண்பித்தனர். பக்தர்கள் முற்றுகை காரணமாக நெல்லையப்பர் கோவில் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

நெல்லையப்பர் கோவிலுக்கு ஆய்வுக்கு வந்த மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளை படத்தில் காணலாம்.

Tags:    

Similar News