செய்திகள்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: கார்களில் போலி நம்பர் பிளேட் பொருத்தி தப்பிய கொள்ளையர்கள்

Published On 2017-04-26 11:33 GMT   |   Update On 2017-04-26 11:33 GMT
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பங்களாவுக்குள் ஜெயலலிதா அறையில் இருந்த நகை- பணம் மற்றும் ஆவணங்களை குறிவைத்து தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை நடந்த ஒரு மணி நேரத்திற்குள் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளை உஷார்படுத்தி தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக எந்த வாகனமும் சிக்கவில்லை.

இதையடுத்து கொலையாளிகள் வந்த கார்கள் குறித்து விசாரிக்க கொடநாடு- கோத்தகிரி சாலை, நீலகிரி மாவட்ட எல்லை சாலைகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் முன்புறம் இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடந்தது. 22-ந் தேதி இரவு முதல் மறுநாள் காலை வரை பதிவான காட்சிகளை கைப்பற்றி உள்ள போலீசார் சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் பட்டியலை சேகரித்தனர். ஆனால் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலை கும்பல் போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த இடத்தில் எந்த கைரேகையும் கிடைக்கவில்லை. எனவே கொள்ளையர்கள் கையுறை அணிந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தடயங்கள் எதுவும் சிக்காமல் இருப்பதற்காக கைதேர்ந்த கொள்ளையர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொள்ளையர்கள் ஊட்டி வழியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்பேரில் ஒரு தனிப்படையினர் கர்நாடகாவுக்கு விரைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த காவலாளி கிருஷ்ணபகதூர் கூறும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு சந்தேகத்திற்கிடமான 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News