செய்திகள்

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் காயத்துடன் சிகிச்சை பெறும் காவலாளியிடம் விசாரணை

Published On 2017-04-25 07:28 GMT   |   Update On 2017-04-25 08:22 GMT
கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் ஓம்பகதூர் என்ற காவலாளியை படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரியில் காயத்துடன் சிகிச்சை பெறும் மற்றொரு காவலாளியிடம் விசாரணை நடைபெற்றது.
கோத்தகிரி:

கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் ஓம்பகதூர் என்ற காவலாளியை படுகொலை செய்தனர். சத்தம் கேட்டு வந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் என்பவரையும் அந்த கும்பல் வெட்டியது.

கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க கிருஷ்ணபகதூர் இறந்தது போல் நடித்துள்ளார். இதனால் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் கிருஷ்ணபகதூர் எழுந்து நடந்த சம்பவங்களை குடியிருப்பு வாசிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னரே இந்த சம்பவம் தெரிய ஆரம்பித்தது. போலீசார் இந்த சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் சோதனைசாவடிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே போலீசார் காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணபகதூரிடம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் எத்தனை பேர் வந்தார்கள்? எந்த மொழியில் பேசினார்கள்? எவ்வளவு நேரம் அங்கு இருந்தார்கள்? என்று விசாரித்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட ஓம்பகதூருக்கும், உங்களுக்கும் முன் விரோதம் ஏதாவது உள்ளதா? என்றும் விசாரணை நடத்தினர்.

Similar News