செய்திகள்
கொடநாடு எஸ்டேட்டில் படுகொலை செய்யப்பட்ட காவலாளி

கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை- கொள்ளை: எஸ்டேட் நிர்வாகிகள் 50 பேரிடம் அதிரடி விசாரணை

Published On 2017-04-25 07:28 GMT   |   Update On 2017-04-25 07:28 GMT
கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து எஸ்டேட், பங்களா நிர்வாகிகள் உள்பட 50 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ஓய்வுக்காக இங்கு வந்து செல்வார். அவர் வரும்போது 100-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.

மற்ற நேரங்களில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் கொடநாடு எஸ்டேட் பரபரப்பு இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இந்த எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டதால் அபராதம் தொகை வசூலிக்க எஸ்டேட் பறிமுதல் செய்யப்படும் என்ற பரபரப்பு தொற்றியது.

பலத்த பாதுகாப்புடன் பிரம்மாண்ட அரண்மனை போல் காட்சி அளிக்கும் கொடநாடு பங்களாவில் தங்க கட்டிகள், நகைகள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் சொத்து பத்திரங்கள், கட்சி ஆவணங்கள் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 10 பேர் கொண்ட முகமூடி கும்பல் எஸ்டேட்டின் 10-வது எண் நுழைவு வாயிலில் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓம்பகதூர்(50) என்ற காவலாளியை தலைகீழாக மரத்தில் கட்டி வைத்து வெட்டி கொன்றனர். சத்தம் கேட்டு ஓடி வந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர்(35) என்பவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

பின்னர் அவர்கள் பங்களாவில் இருந்த தங்க கட்டிகள், சொத்து ஆவணங்களை எடுத்து கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து எஸ்டேட், பங்களா நிர்வாகிகள் உள்பட 50 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு பங்களா குறித்து நன்கு அறிந்தவர்கள் சிலர் இதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளனர்.

Similar News