செய்திகள்

திருப்பத்தூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2017-04-24 05:21 GMT   |   Update On 2017-04-24 05:21 GMT
திருப்பத்தூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையம் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்:

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்பட்டது. இதனையடுத்து அந்த கடையை திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாப்பட்டு உள்ளிவட்டம் என்ற இடத்தில் திறப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனை அறிந்த அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டில் இருந்து உள்ளிவட்டம் பகுதிக்கு செல்லும் சாலையில் மூங்கில் வேலி தடுப்பு அமைத்து, அதிகாரிகள் மதுபானக்கடைக்கு தேர்வு செய்த இடத்தில் 2½ அடி ஆழத்திற்கு சுமார் 3 அடி அகலத்திற்கு பள்ளம் வெட்டியிருந்தனர். இருப்பினும் அப்பகுதியில் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.


இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் டாஸ்மாக் கடை வரக்கூடாது என கோ‌ஷங்களை எழுப்பினர்.

பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கலவை பஜார் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் கலவை - சென்னசமுத்திரம் சாலையில் கலவை அப்பாதுரைபேட்டை பகுதியில் விளை நிலங்கள் அருகே அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. நிர்வாகி பிரபாகரன் என்பவர் தலைமையில் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என கடையை முற்றுகையிட்டு கோ‌ஷம் போட்டனர். கடை முன்பு நடைபெற்ற இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Similar News