செய்திகள்

நிதி பெற்றுதர வியாபாரி அல்ல: கவர்னரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

Published On 2017-04-23 11:27 GMT   |   Update On 2017-04-23 11:27 GMT
நிதி பெற்றுதர நான் வியாபாரியா? என்று கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் எத்தனையோ கவர்னர்கள் பொறுப்பில் இருந்துள்ளார்கள். அவர்கள் ஆட்சியாளர்களுடன் கருத்து மோதல் ஏற்பட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. கடுமையான வார்த்தைகளை பேசியதில்லை.

கவர்னர் கிரண்பேடி புதுவைக்கு மத்திய அரசிடம் நிதி பெற்று தர நான் வியாபாரியா? என டுவிட்டரில் பதிவு செய்து அது செய்தி தாள்களிலும் வந்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கதும், கண்டிக்கத் தக்கதுமாகும். மாநிலம் நிதி பற்றாக்குறையில் இருக்குமேயானால், மத்திய அரசிடம் நிதி பெற கவர்னர் முயற்சி செய்வது தான் மரபு. அதையே கொச்சைப்படுத்துவது அநாகரீகமாகும்.

மேலும் பாரதீய ஜனதா கட்சியினரின் புதுவையின் வளர்ச்சியை தடுக்கும் சூழ்ச்சியினால் தான் கவர்னர் இவ்வாறு பேசுகிறார் என பொதுமக்கள் நினைக்கும் வகையில் உள்ளது.

ரூபாய் நோட்டு பிரச்சினையினால் நாடு முழுவதும் 25 சதவீதம் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுவையின் வியாபாரமும், தொழில் வளர்ச்சியும் பின் தங்கி கொண்டே செல்கிறது.

எனவே கவர்னர், கட்சி பேதம், தனிப்பட்ட சூழ்ச்சி, அரசியல் சூழ்ச்சி இவற்றுக் கெல்லாம் அப்பாற்பட்டு, மாநில மக்களின் நலன், மக்கள் சேவை, தொழில் வளர்ச்சி இவற்றை கணிசமாக உயர்த்தும் வகையில் மாநில அரசோடு கைகோர்த்து செயல்படவேண்டும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சரவைக்கு ஒத்துழைப்பு நல்கி ஒருமித்த கருத்துடன் மக்கள் பணி செய்து, கவர்னர்கள் வரிசையில் தனக்கென்று தனி முத்திரை பதிப்பதோடு, மக்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்திட காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News