செய்திகள்
கொலையாளி சிவக்குமார், கைதான வசந்தா

தந்தை- அக்காள் மகன் கொடூர கொலை: உடல் பாகங்கள் மீட்பு - தாயுடன் மகன் கைது

Published On 2017-04-21 09:11 GMT   |   Update On 2017-04-21 09:12 GMT
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் குடும்ப தகராறில் தந்தை, அக்காள் மகனை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய மகனையும், தாயையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை கோரிமேடு காமராஜர் நகர் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வசந்தா (65), இவர்களுக்கு ‌ஷகிலா (43) என்ற மகளும், சிவக்குமார் (42) என்ற மகனும் உள்ளனர்.

‌ஷகிலாவுக்கு திருமணமாகி பரத்குமார் (14) என்ற மகன் இருந்தான். அவன் குழந்தையாக இருந்த போதே செல்வராஜ் தனது வீட்டுக்கு எடுத்து வந்து வளர்ந்து வந்தார். 9-ம் வகுப்பு மாணவனான அவன் இங்கிருந்து தான் பள்ளிக்கு சென்று வந்தான்.

செல்வராஜுக்கும், மகன் சிவக்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கடந்த 15-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் தந்தை செல்வராஜை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதை தடுக்க வந்த சிறுவன் பரத்குமாரையும் கத்தியால் குத்தினார். அவனும் இறந்து விட்டான்.

இதனால் பயந்துபோன சிவக்குமாரும், தாயார் வசந்தாவும் வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை சென்றனர். 2 நாட்கள் கழித்து இரவு புதுவைக்கு திரும்பினார்கள். தாயாரை அரியாங்குப்பத்தில் தனியாக விட்டு விட்டு சிவக்குமார் மட்டும் வீட்டுக்கு வந்தார்.

இருவரது உடலையும் துண்டு, துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்தார். பின்னர் அவற்றை சாக்கு பையில் போட்டு மூட்டையாக கட்டி ஸ்கூட்டரில் எடுத்து சென்று தமிழக பகுதியான பூத்துறை என்ற இடத்தில் காட்டு பகுதியில் வீசினார்.

இதற்கிடையே கொலை நடந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது. போலீசார் விரைந்து சென்று வீட்டை உடைத்து பார்த்தனர். அங்கு ரத்தம் தேங்கி கிடந்தது.

இதையடுத்து அரியாங்குப்பத்தில் பதுங்கி இருந்த சிவக்குமார் அவரது தாயார் வசந்தாவை கைது செய்தனர்.

உடல்கள் வீசப்பட்ட இடத்தை சிவக்குமார் அடையாளம் காட்டினார். உடல்களை கைப்பற்றி போலீசார் புதுவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டை கொலை பற்றி சிவக்குமார் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது தந்தை செல்வராஜ் ராணுவத்தில் இருந்தவர் என்பதால் மிகவும் கோபக்காரராக இருந்து வந்தார். எதற்கெடுத்தாலும் என்னை கண்டிப்பார். நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் படித்தேன். எனது அக்காள் ‌ஷகிலா நர்சு படிப்பு படித்தாள். அவளுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து வந்து விட்டாள். அவளது மகன் எங்கள் வீட்டில்தான் வளர்ந்து வந்தான்.

நான் பிசியோதெரபிஸ்ட் படித்திருந்தாலும் சரியான வேலை கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக வீட்டுக்கு சென்று சிகிச்சை அளித்து வந்தேன்.


திருமண வயது வந்ததும் எனக்கு தந்தை திருமணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே எனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரிடம் பல முறை வற்புறுத்தி கூறினேன். ஆனால், அவர் உனக்கு திருமணம் செய்து வைத்தால் குடும்பம் நடத்தி கொள்ள மாட்டாய் என்று கூறி பெண் பார்க்க மறுத்து விட்டார். இதனால் எனக்கு 42 வயது ஆகி விட்ட நிலையிலும் திருமணம் ஆகவில்லை.

எனக்கு இத்தனை வயது ஆகி விட்ட நிலையிலும், என்னை தந்தை அடிக்கடி அடிப்பார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தேன். எனது தாயார் தான் எனக்கு ஆறுதலாக இருந்து வந்தார். அவரையும் அடிக்கடி அடிப்பார்.

வீட்டுக்குள் கூட என்னை செல்ல விட மாட்டார். பாத்ரூமையும் பயன்படுத்த விட மாட்டார். நான் வீட்டின் மொட்டை மாடியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தேன். இயற்கை உபாதை ஏற்படும் நேரத்தில் காட்டு பகுதிக்கு தான் செல்வேன்.

நாங்கள் குடியிருக்கும் வீடு எனது தாயார் பெயரில் உள்ளது. அதை எனது அக்காள் மகன் பரத்குமார் பெயரில் எழுதி வைப்பதற்கு எனது தந்தை முயற்சி செய்தார். ஆனால், எனது தாயார் அதற்கு மறுத்து விட்டார்.

இதனால் அவருக்கு மேலும் கோபம் அதிகரித்தது. எங்கள் இருவரையும் எந்நேரம் பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருந்தார். அடிக்கடி தாக்கவும் செய்தார்.

அதேபோல் சனிக்கிழமை நான் வீட்டுக்குள் சென்றேன். அப்போது அவர் என்னிடம் தகராறு செய்தார். திடீரென கத்தியை எடுத்து என்னை குத்துவதற்கு வந்தார். நான் அந்த கத்தியை பறித்து அவரை குத்தினேன். இதில், கீழே விழுந்து இறந்து விட்டார். அந்த நேரத்தில் பரத்குமார் தடுக்க வந்தான். அவனையும் குத்தினேன். அவனும் இறந்து விட்டான். பின்னர் நானும், எனது தாயாரும் அங்கிருந்து சென்று விட்டோம். 2 நாள் கழித்து பிணத்தை மறைப்பதற்கு முயற்சி செய்தேன்.

அப்படியே பிணத்தை எடுத்து சென்றால் யாராவது கண்டுபிடித்து விடுவார்கள் என கருதினேன். எனவே துண்டு துண்டாக வெட்டி காட்டு பகுதியில் போட்டு விடுவது என்று முடிவு செய்தேன்.

நான் பிசியோதெரபிஸ்ட் படித்து இருந்ததால் உடல் பாகங்கள் பற்றி நன்றாக தெரியும். எனவே, கத்தியை எடுத்து ஒவ்வொரு பாகமாக துண்டித்தேன். கழுத்து, கை- கால் என ஒவ்வொரு மூட்டு பகுதியிலும் வெட்டி தனித்தனியாக எடுத்தேன். கழுத்தில் இருந்து இடுப்பு பகுதியை மட்டும் தனியாக துண்டித்து எடுத்தேன். பின்னர் பிளாஸ்டிக் பைகளில் போட்டு அவற்றை கட்டினேன். அடுத்து சாக்கு மூட்டைகளை வாங்கி வந்து 7 மூட்டைகளில் அவற்றை அடைத்தேன்.

இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் ஏற்றி அருகில் உள்ள பூத்துறை காட்டுக்கு சென்று பள்ளத்தில் வீசினேன். 4 முறை அடுத்தடுத்து வீட்டுக்கு வந்து பிண மூட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சென்றேன்.

அடுத்து வீட்டுக்கு வந்து ரத்தக் கறைகளை கழுவி விட்டேன். ஆனாலும் முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. ஆங்காங்கே ரத்தம் தேங்கி நின்றது. அதில் பினாயிலை தெளித்தேன். ஊதுவத்தியும் ஏற்றி வைத்தேன். அதையும் மீறி வெளியே துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தெரிவித்ததால் நான் மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு சிவக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Similar News