செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக உழவர் சந்தையில் விற்பனையை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

Published On 2017-04-21 05:50 GMT   |   Update On 2017-04-21 05:51 GMT
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட உழவர் சந்தை விவசாயிகள் சார்பில் இன்று காய்கறிகள் விற்பனை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நதிகளை இணைக்க வேண்டும். தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தை முழுமையாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட உழவர் சந்தை விவசாயிகள் சார்பில் இன்று காய்கறிகள் விற்பனை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டிலும் விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக மார்கெட்டுக்கு பெங்கலூர், தாராபுரம், பல்லடம், அவினாசிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகளை இன்று விவசாயிகள் எடுத்து வரவில்லை.

இதனால் தினமும் காலைநேரங்களில் பரபரப்பாக காணப்படும் தென்னம்பாளையம் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மார்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்த சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் காய்கறிகள் வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ரூ.35 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Similar News