செய்திகள்

நண்பனின் தந்தையை வெட்டி கொன்ற கல்லூரி மாணவர்

Published On 2017-04-18 12:21 GMT   |   Update On 2017-04-18 12:21 GMT
ராயக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக நண்பனின் தந்தையை வெட்டி கொன்ற மாணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள கிருஷ்ணகிரி சாலை கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (55). இவர் அந்த பகுதியில் ஒரு மளிகை கடை நடத்தி வந்தார்.

இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், கணேஷ்குப்தா என்ற மகனும் உள்ளனர். கணேஷ்குப்தா ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர் ராயக்கோட்டை தொட்ட மெட்டரை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (19). என்பவரும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணேஷ் குப்தாவுக்கும் அவருடைய நண்பர் ராஜேசுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக முன்விரோதம் இருந்தது வந்தது.

இன்று காலை கோவிந்தன் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் கோவிந்தனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலையிலும், கழுத்திலும் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மனைவி ரேணுகா மற்றும் கணேஷ்குப்தா ஆகியோர் தடுக்க வந்தனர்.

அப்போது ராஜேஷ் அரிவாளால் கணேஷ் குப்தாவை வெட்டினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் திருப்பி ராஜேசை கட்டையால் தாக்கினார். தலையில் அடிபட்டதால் அதே இடத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவருடன் வந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே அரிவாளால் வெட்டுப்பட்ட கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து கோவிந்தன் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ராஜேசையும், கணேஷ் குப்தாவையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

முன்விரோதம் காரணமாக கணேஷ் குப்தாவை கொல்ல வந்த நண்பர்கள் அவரது தந்தையை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவான ராஜேஷ் உடன் வந்த நண்பர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

வீட்டுக்குள் புகுந்து நண்பரின் தந்தையை கல்லூரி மாணவர் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News