செய்திகள்

கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை

Published On 2017-04-17 13:12 GMT   |   Update On 2017-04-17 13:13 GMT
கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடும் வறட்சி நீடித்து வந்தது. இதனால் குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறையே சப்ளை செய்யப்பட்டது.

விவசாயிகளும் பயிரிட்ட பயிர்கள் கருகுவதைக் கண்டு வேதனையடைந்தனர். விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகளும் கடும் வெயில் மற்றும் குடிநீர் தட்டுப்பாடால் மிகவும் அவதிக்குள்ளாயினர். மழை எப்போது வரும் என அனைவரும எதிர்பார்த்திருந்தனர்.

இதனிடையே நேற்று பகல் 1 மணி வரை கடும் வெயில் நீடித்து வந்தது அதன் பின்பு கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. ¼ மணி நேரம் ஆலங்கட்டி மழையும் அதனைத் தொடர்ந்து 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்தது.

சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், குணாகுகை, தூண்பாறை, பைன்பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகளை கண்டு ரசித்தனர்.

மேலும் படகு சவாரி மற்றும் ஏரியைச் சுற்றி சைக்கிளில் சென்றனர். இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே வருங்காலங்களில் கோடையை சமாளிக்க முடியும். விவசாயிகளும் இதனை நம்பி பயிரிட்டுள்ள பயிர்களும் செழிக்கும் என தெரிவித்தனர்.

Similar News