செய்திகள்

ஊட்டிக்கு ஒரே நாளில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

Published On 2017-04-16 13:29 GMT   |   Update On 2017-04-16 13:29 GMT
ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் வர்த்தக நிறுவனங்கள், டாக்சி, ஆட்டோக்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.

ஊட்டி:

சமவெளி பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.

நீலகிரியில் குளுகுளு சீசன் தொடங்கியுள்ளதால் வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் பயணிகளின் கூட்டம் களை கட்டியுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக ஊட்டி ஹில்பங் பகுதியில் இருந்து சேரிங்கிராஸ் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் ஊட்டி- குன்னூர் சாலையிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட நேரம் பிடித்தது.

140 ஆண்டுகள் இல்லாத கடும் வறட்சி தற்போது நிலவி வருகிறது. இதில் இருந்து தப்பிக்க அதிக சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஒரு நாள் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலை, மாலை இருவேளை மட்டுமே மலை ரெயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் கூடுதல் ரெயில் விடவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தை பயன்படுத்தி ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் 2 மடங்கு கட்டணத்தை உயர்த்துள்ளன.

இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி யடைந்தனர். பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை. வங்கி நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் வரத்தை பொறுத்து பணத்தை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் வர்த்தக நிறுவனங்கள், டாக்சி, ஆட்டோக்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.

Similar News