செய்திகள்

நெல்லையில் 5 கடைகளே செயல்படுகின்றன: டாஸ்மாக் கடைகளை தேடி அலைந்த மது பிரியர்கள்

Published On 2017-04-02 15:23 GMT   |   Update On 2017-04-02 15:23 GMT
நெல்லையில் 5 கடைகளே செயல்படுவதால் டாஸ்மாக் கடைகளை தேடி மது பிரியர்கள் அலைந்தனர். மதுக்கடைகள் அகற்றப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.

நெல்லை:

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுக்கடைகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் இதுபோன்று உள்ள கடைகளை உடனே அகற்றுமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவே தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 128 டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் 18 ஓட்டல் மதுக்கூடங்கள் அடைக்கப்பட்டன.

நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 43 கடைகள் இருந்தன. இவற்றில் மொத்தம் 38 கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. 5 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் மதுபிரியர்கள் திண்டாட்டம் அடைந்து உள்ளனர். நெல்லையில் நேற்று மதியம் இருந்தே குடிப்பிரியர்கள் மதுக்கடைகளை தேடி அலைய தொடங்கினர். இருக்கும் 5 கடைகளை தேடி கண்டு பிடித்து மது குடித்தனர். மொத்த மது பிரியர்களின் கூட்டமும் மதுக்கடைகள் முன்பு திரண்டன. இதனால் 5 கடைகள் முன்பும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்ட நெரிசலில் தகராறு வராமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

பாளை மகாராஜநகரில் உள்ள கடை முன்பு இன்று காலையே மதுபானம் வாங்க குடிப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 20 க்கும் மேற்பட்டோர் குடிநீர் பிடிக்கவும், தட்கல் ரெயில் டிக்கெட் எடுக்கவும் இடம்பிடித்தது போல கற்கள் மற்றும் பொருட்களை போட்டு இடம்பிடித்திருந்தனர். குடிக்கு அடிமையான சிலர் கடை வாசலிலேயே படுத்திருந்தது பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி மதுக்கடை பார் நடத்தி வந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் கூறுகையில், “மதுக்கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. இந்த கடைகள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி வேறு இடத்துக்கு மாற்ற இருக்கிறோம். 15 நாட்களில் இந்த பணி நடக்கும். அதன்பிறகு வழக்கம்போல மதுக்கடைகள் செயல்படும்” என்றனர். இதனிடையே மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக பெண்கள் மதுக்கடைகள் அகற்றப்பட்டதை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். நெல்லையில் நேற்று சமூக அமைப்பினர் டாஸ்மாக் மதுபானங்களை தரையில் கொட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். வேறு இடத்தில் கடைகள் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்றும் பெண்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் இடம் அருகே மதுக்கடைகள் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மீறி திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆலங்குளத்தில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். மேலும் அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடங்களை யாரும் வழங்கக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து நாம்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், “ஆலங்குளத்தில் இருந்த 7 டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டது வரவேற்ககூடியது.

இனி ஆலங்குளம் பகுதிக்கு மதுக்கடைகளே வரக்கூடாது. ஊருக்குள் டாஸ்மாக் கடை நடத்த யாரும் இடம் கொடுக்கக்கூடாது. ஊருக்குள் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம்” என்றார்.

Similar News