செய்திகள்

ஆர்.கே.நகரில் ஆரத்தி எடுத்தாலும், கோலம் போட்டாலும் பண மழை

Published On 2017-03-30 06:36 GMT   |   Update On 2017-03-30 08:32 GMT
ஆர்.கே.நகரில் பெண்கள் ஆரத்தி எடுத்தால் ரூ.100, கோலம் போட்டால் ரூ.500, பூ தூவினால் ரூ.300 என்று தனித்தனி தொகை நிர்ணயித்துள்ளதால் வேட்பாளர்களை வரவேற்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சென்னை:

ஆர்.கே.நகரில் பணமழை கொட்டப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது. அதை தடுப்பதற்கான வியூகங்களையும் தேர்தல் ஆணையம் வகுத்து வருகிறது.

எனவே பண விநியோகத்தில் அரசியல் கட்சிகளும் புதிய தந்திரத்தை கையாளுகின்றன. பூத் செலவுக்காக முதல் தவணை பணம் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டு விட்டது.

தினமும் காலையிலும், மாலையிலும் பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு ரூ.300 வழங்கப்படுகிறது.

இதனால் பெண்கள் உற்சாகமாக உள்ளார்கள். மற்றொரு கட்சி ஆள் பற்றாக்குறை காரணமாக ரூ.500 தருவதாக அழைத்தால் அங்கு சென்று விடுகிறார்கள்.

பிரசாரம் முடிந்ததும் பொறுப்பாளர்கள் பணத்தை கொடுக்கிறார்கள். அதில் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதால்தான் மறுநாள் பெண்கள் குறைவாக வருவதாகவும் வேட்பாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே பணத்தை ஒழுங்காக கொடுத்து விடுங்கள் என்று பொறுப்பாளர்களை அழைத்து ஒரு வேட்பாளர் டோஸ் விட்டுள்ளார்.



வேட்பாளர் ஓட்டு கேட்டு செல்லும்போது ஆரத்தி எடுப்பது, தெருக்களில் கோலம் போடுவது, மாடிகளில் இருந்து பூக்களை தூவுவது போன்றவை இடம் பெறுகிறது.

இதில் பெண்கள் ஆரத்தி எடுத்தால் ரூ.100, கோலம் போட்டால் ரூ.500, பூ தூவினால் ரூ.300 என்று தனித்தனி தொகை நிர்ணயித்துள்ளார்கள். இந்த தொகைகள் உடனுக்குடன் பைசல் செய்யப்பட்டு விடுகிறது.

இதனால் வேட்பாளர்களை வரவேற்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Similar News