செய்திகள்
தீப்பற்றி எரிந்த தேங்காய் பருப்பு குடோன்.

காங்கயம் அருகே குடோனில் தீவிபத்து: 14 ஆயிரம் மூட்டை தேங்காய் பருப்பு எரிந்து நாசம்

Published On 2017-03-29 04:06 GMT   |   Update On 2017-03-29 04:06 GMT
காங்கயம் அருகே குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 14 ஆயிரம் மூட்டை தேங்காய் பருப்பு எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரில் உள்ள பழையகோட்டை ரோட்டை சேர்ந்தவர் மயில்சாமி. தேங்காய் எண்ணெய் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான தேங்காய் பருப்பு குடோன் காங்கயத்தை அடுத்த பதி யாண்டிபாளையம் அருகே உள்ள தோட்டத்தில் உள்ளது.

இந்த குடோனில் தேங்காய் பருப்பு சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் தேங்காய் பருப்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 14 ஆயிரம் மூட்டை தேங்காய் பருப்பு எரிந்து நாசமானது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் குடோனும் பலத்த சேதமடைந்தது.

இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.




Similar News