செய்திகள்

தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்: குமரி அனந்தன் பேட்டி

Published On 2017-03-28 12:31 GMT   |   Update On 2017-03-28 12:31 GMT
கங்கை முதல் பிரம்மபுத்திரா வரை உள்ள நதிகளை இணைத்தால் நாட்டின் தண்ணீர் தேவை முழுவதையும் பூர்த்தி செய்யலாம் என்று மதுவிலக்கு கோரி நடைபயணமாக வந்த குமரிஅனந்தன் பேட்டியின்போது கூறினார்.

வாலாஜா:

மதுவிலக்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் சென்னையிலிருந்து ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது பயணத்தை கடந்த 19-ந் தேதி தொடங்கினார். நடைபயணத்தில் தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எர்னஸ்ட்பால், தலைமை நிலைய செயலாளர் ராமசாமி உள்பட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை வந்தடைந்தனர். அவர்களுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், ராணிப்பேட்டை நகர தலைவர் அண்ணாதுரை, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி.பிரிவு தலைவர் நாகேஷ் உள்பட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள் இங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கினர்.

அப்போது குமரி அனந்தன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கங்கை முதல் பிரம்மபுத்திரா வரை உள்ள நதிகளை இணைத்தால் நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து விடலாம். கேரளாவில் 2 ஆயிரத்து 500 டி.எம்.சி.தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் 500 டி.எம்.சி.தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பிவிட்டாலே கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும் .

நதிகள் தேசியமயமாக்கப்பட்டால் சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து நீர் வழி மூலம் மேற்கொள்ளப்படும். இதனால் எரிபொருள் சேமிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 39 ஆயிரம் ஏரி, குளங்கள் குடிமராமத்து மூலமாக தூர்வாரப்பட வேண்டும். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்படும். இமயம் முதல் குமரி வரை 14 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீர்வழிப்பாதையை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு குமரி அனந்தன் தெரிவித்தார்.

நடைபயண குழுவினர் இன்று  ராணிப்பேட்டையிலிருந்து தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.

Similar News