செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டம்

Published On 2017-03-28 07:48 GMT   |   Update On 2017-03-28 07:49 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை தொடர் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:

காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை தொடர் முற்றுகையிடும் போராட்டம் இன்று தொடங்கியது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். புதிய ஒற்றை தீர்ப்பாயத்திற்கு காவிரி வழக்கை அனுப்பக் கூடாது.

விளை நிலங்களில் பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி எடுக்க கூடாது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

உச்சவரம்பின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் முற்றுகை நடைபெறுகிறது.

இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தொடங்கி வைத்தார்.

இதில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்,தமிழ் விடுதலை புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயனாவரம் முருகேசன், ஐ.ஜே.கே கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், வணிகர் சங்க பேரவை தஞ்சை மாவட்ட தலைவர் கணேசன், வணிகர் சங்க பேரமைப்பு மேற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இலை, தழைகளை மாலையாக அணிந்தும் நெற்றி, வயிற்றில் பட்டை நாமமும் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் கூழாங்கல் சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.


போராட்டத்தில் கலந்து கொண்ட வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கர்நாடகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தை கர்நாடகம் வஞ்சிக்கிறது. தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது.

மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் வரவிடாமல் கர்நாடகம் செயல்படுகிறது. தமிழகத்திற்கு காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.

இல்லாவிட்டால் விவசாயிகளுடன் இணைந்து வணிகர் சங்கம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News