செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

மாதவரத்தில் என்ஜினீயர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை

Published On 2017-03-26 07:38 GMT   |   Update On 2017-03-26 07:38 GMT
மாதவரத்தில் என்ஜினீயர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாதவரம்:

மாதவரம் கே.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி பிரதீப்ராஜ். அடையாறில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது தந்தை சுரேஷ், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தாய் சாந்தி, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

அந்தோணி பிரதீப்ராஜின் 1½ வயது மகளுக்கு வேளாங்கண்ணியில் உள்ள ஆலயத்தில் மொட்டை போடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு அனைவரும் சென்றனர்.

இன்று காலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 90 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கத்தை காணவில்லை.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் ராஜேந்திரன், உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பக்கத்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அந்தோணி பிரதீப்ராஜ் வீட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. வீடியோ காட்சி தெளிவாக இல்லாததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

வீட்டின் மற்றொரு அறையில் 40 பவுன் நகை இருந்தது. அதனை கொள்ளையர்கள் கவனிக்காததால் அவை தப்பியது.

நேற்று மதியம் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் மின்வாரிய ஊழியர் போல் புகுந்த மர்ம கும்பல் 45 பவுன் நகை மற்றும் 3½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாதவரத்தில் மீண்டும் கொள்ளை நடந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News