செய்திகள்
கைதான கிராம நிர்வாக அலுவலர் சந்திரகாசன்.

விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

Published On 2017-03-25 06:50 GMT   |   Update On 2017-03-25 06:50 GMT
விழுப்புரத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையாப்பிள்ளை (வயது 35), விவசாயி. இவருடைய தாத்தா ரத்தினகவுண்டர் கடந்த 11.2.17 அன்று உடல்நலக்குறைவால் இறந்தார்.

இவருடைய பெயரில் இருந்த குடும்ப சொத்தை பாகம் பிரிப்பதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு பச்சையாப்பிள்ளை தனது தாய் சின்னப்பொன்னு பெயரில் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை விசாரித்து சான்றிதழ் அனுப்பும்படி வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் வடசேமபாளையத்தை சேர்ந்த சந்திரகாசனுக்கு (38) தாசில்தார் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி சந்திரகாசன், மேலப்பட்டு கிராமத்திற்கு சென்று சின்னப்பொன்னுவின் குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை சேகரித்தார்.

அப்போது இதுசம்பந்தமான சான்றிதழை வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டு மானால் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என பச்சையாப்பிள்ளையிடம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரகாசன் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பச்சையாப்பிள்ளை, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் பச்சையாப்பிள்ளை சங்கராபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரும் அங்கு சென்று மறைவான இடத்தில் நின்று கண்காணித்தனர்.

பின்னர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சந்திரகாசனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தை பச்சையாப்பிள்ளை கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கியபோது சந்திரகாசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Similar News