செய்திகள்

பரமத்திவேலூரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2017-03-23 11:23 GMT   |   Update On 2017-03-23 11:23 GMT
பரமத்திவேலூரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது 62).

இவர் நாமக்கல் அரசு கலைக்கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சாந்தி (55). இவர்களுக்கு பிரேம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் வேலுசாமியும் சாந்தியும் கடந்த 20-ந் தேதி பிரேம்குமாரை பார்ப்பதற்காக சென்னைக்கு சென் றனர். வேலுசாமியின் வீட்டை வெட்டுக்காரன்புதூரை சேர்ந்த சரசு என்பவர் சுத்தம் செய்து பூட்டி விட்டு சாவியை எடுத்து செல்வார்.

இதனையடுத்து இன்று காலை வழக்கம்போல் வேலுசாமியின் வீட்டை சுத்தம் செய்ய சரசு வந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தார் அங்கு வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வேலுசாமிக்கு செல்போன் மூலம் சரசு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த வேலுசாமி பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி. சுஜாதாவுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வேலுசாமி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்ற இருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து பணம் - நகை கொள்ளை சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

சுமார் 1லட்சம் பணமும், 20 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் கொள்ளைபோன பொருட்கள் முழுவிபரம் வேலுசாமி சென்னையில் இருந்து திரும்பிய பிறகு தான் தெரியவரும். கொள்ளை நடந்த இடத்திற்கு மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களையும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News