செய்திகள்
அரிவாள் வெட்டு காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தர்மர்.

முன்விரோதத்தில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நோயாளியை கொல்ல முயற்சி: 5 பேர் கைது

Published On 2017-03-22 06:42 GMT   |   Update On 2017-03-22 06:42 GMT
திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நோயாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மாந்துறைநகர் பகுதியை சேர்ந்தவர் தர்மர் (வயது 57), விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருச்சியில் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் இசக்கியேல் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த தர்மர் லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று பிற்பகலில் அவர் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரி வார்டு பகுதிக்குள் நுழைந்த 2 பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தர்மரை சரமாரியாக வெட்டினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளி கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறினர். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த தர்மர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அரசு ஆஸ்பத்திரியின் உள்ளே புகுந்து தர்மரை அரிவாளால் வெட்டியவர்கள் இசக்கியேலின் மகன் வினோத் (35) மற்றும் வினோத்தின் நண்பர் மருதை (31) என்பதும், நிலத்தகராறில் தர்மரை வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தர்மரை கொலை செய்ய தூண்டியதாக இசக்கியேல், அவரது மனைவி லீமா ரோஸ் (50), வினோத்தின் மனைவி ஆரோக்கிய செல்வி (35) ஆகிய 3 பேரையும் போலீ சார் கைது செய்தனர்.

Similar News