செய்திகள்

10-ம் வகுப்பு கணித தேர்வில் 5 மதிப்பெண் கேள்வி தவறு?: மாணவர்கள் அதிர்ச்சி

Published On 2017-03-20 10:30 GMT   |   Update On 2017-03-20 10:30 GMT
இன்று நடைபெற்ற 10-ம் வகுப்பு கணித தேர்வில் 5 மதிப்பெண் கேள்வித்தாள் தவறாக இருந்ததால் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர்:

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழி பாடத் தேர்வுகள் முடிந்த நிலையில், கணிதத் தேர்வு இன்று நடைபெற்றது.

மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுத சென்றனர். தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டது. வினாத்தாளை பார்த்தபோது, அதில் 36-வது 5 மதிப்பெண் கேள்வி தவறான கேள்வியாக தெரிந்தது.

வர்க்க மூலம் சரிசெய் என்று கேட்கப்பட்ட அந்த கேள்வி, படித்த பாடப் புத்தகத்திலேயே இல்லையென்று தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர்.

மேலும் மற்ற கேள்விகளும் கடினமாக இருந்ததாகவும் கூறினர். தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு 5 மதிப்பெண்ணை தேர்வுத் துறை வழங்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களும், இதே கோரிக்கையை வலியுறுத்தினர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கேள்வியே தவறாக கேட்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News