செய்திகள்

ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு: தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-02-27 06:51 GMT   |   Update On 2017-02-27 06:51 GMT
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அத்து மீறி ஹைட்ரோ கார்பன் எரி வாயு எடுப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிடக் கோரி தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அண்ணாத்துரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அவரிடம் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அத்து மீறி ஹைட்ரோ கார்பன் எரி வாயு எடுப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் தீக்குளிப்போம்.

ஹைட்ரோ கார்பன் எரி வாயு எடுப்பதை கண்டித்து தினமும் ஒரு போராட்டம் நடத்துவோம். சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடைபெறும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் நிருபர்களிடம் கக்கரை சுகுமாறன் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. டெல்டா மாவட்டத்தில் 10 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே சிறு, குறு என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளை அழிக்க நினைத்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News