செய்திகள்
தெப்பக்காடு வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையை படத்தில் காணலாம்.

கடும் வறட்சியால் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் ஒரே நாளில் 2 யானைகள் இறந்தன

Published On 2017-02-22 03:38 GMT   |   Update On 2017-02-22 03:38 GMT
கடும் வறட்சி காரணமாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் நேற்று ஒரே நாளில் 2 யானைகள் இறந்தன.
மசினகுடி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மரம், செடி, கொடிகள் பட்டுப்போய் காட்சி அளிக்கின்றன.

இதனால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் வனவிலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்கும் இடங்களை நோக்கி இடம் பெயர்ந்து செல்ல தொடங்கி உள்ளன. இந்நிலையில் கடும் வறட்சியால் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் நேற்று ஒரே நாளில் 2 யானைகள் இறந்தன.

மசினகுடி வனப்பகுதியில் வறட்சி காரணமாக 5 மாத குட்டி யானை இறந்தது. தெப்பக்காடு வனப்பகுதியில் 40 வயது பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். கடும் வறட்சியே யானைகள் சாவுக்கு காரணம் என தெரியவந்தது.

நெலாக்கோட்டை வனப்பகுதியில் இறந்து பல நாட்களான யானையின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த யானையின் சாவுக்கு காரணம் என்ன? எப்போது அந்த யானை இறந்தது? என வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Similar News