செய்திகள்
வேல்முருகன்

சசிகலாவுக்கு எதிராக பேட்டியளித்த தேனி போலீஸ்காரர் இடமாற்றம்

Published On 2017-02-15 04:45 GMT   |   Update On 2017-02-15 04:45 GMT
தேனியில் சசிகலாவுக்கு எதிராக பேட்டியளித்த போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தேனி:

தேனி மாவட்டம் குச்சனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவை முதல்- அமைச்சராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்தால் மெரினாவில் ஜெயலலிதா சமாதி முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பேட்டியளித்தார்.

நேற்று சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்பை அடுத்து தேனி நேரு சிலை அருகே பேட்டி அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அப்பகுதியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தேனி நேரு சிலை சிக்னல் அருகே வந்த வேல் முருகனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி இனிமேல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அவர் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Similar News