செய்திகள்

நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-02-14 09:52 GMT   |   Update On 2017-02-14 09:52 GMT
சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை:

சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் மேற்பார்வையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாநகரில் கமி‌ஷனர் திருஞானம் உத்தரவின் பேரில் பழைய பேட்டை, டக்கரம்மாள்புரம், வி.எம்.,சத்திரம், கே.டி.சி.நகர், தாழையூத்து சுப்புராஜ் மில், மேல கருங்குளம் ஆகிய இடங்களில் செக் போஸ்ட் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். போலீஸ் ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். ரவுடிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள், அரசு சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்கள் யார்? யார்? என்று கண்டுபிடித்து அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

நேற்று மாலை முதல் அனைத்து பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் 20 பேரும், மாநகர பகுதியில் 14 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 77 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை வரை நெல்லை மாவட்டத்தில் மேலும் 21 பேரும், மாநகர பகுதியில் 7 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 35 பேரும் என 63 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீடுகள், அரசியல் கட்சி அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்.

Similar News