செய்திகள்

நாமக்கல் அருகே நடிகர் விக்ரம் ரசிகர் குத்திக்கொலை

Published On 2017-01-30 11:58 GMT   |   Update On 2017-01-30 11:58 GMT
நாமக்கல் அருகே நடிகர் விக்ரம் ரசிகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள தூசூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் என்ற நடராஜ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியின் கடைசி மகன் மணிகண்டன் (வயது 20).பாலிடெக்னிக் வரை படித்துள்ள இவர் தமிழ்நாடு கபடி அணியில் விளையாட்டு வீரராக இருந்தார்.

தமிழக அணி சார்பில் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி கோல்டு மெடல் உள்பட பல்வேறு கோப்பைகளை பெற்றுள்ளார். இது தவிர நடிகர் விக்ரமின் தீவிர ரகிகராகவும் இருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டனின் சொந்த ஊரான தூசூரில் நடிகர் விக்ரம் ரசிகர் மன்றம் தொடங்குவது குறித்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட சிலர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

அப்போது மணிகண்டன் நான் விக்ரம் ரசிகர் மன்ற தலைவராக ஏற்கனவே உள்ளேன் என்று அவர்களிடம் கூறி உள்ளார். இதில் மணிகண்டனுக்கும், ராமச்சந்திரன் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அஜித்குமார், பழனிச்சாமி உள்பட பலர் ஒரு கோஷ்டியாகவும், ராமச்சந்திரன், ரகுமான், ரவிச்சந்திரன் உள்பட சிலர் மற்றொரு கோஷ்டியாகவும் பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதல் மேலும் வலுத்ததால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த அஜித்குமார், பழனிச்சாமி ஆகியோரையும் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் மணிகண்டனின் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பர பரப்பு நிலவியதுடன் பதட்டமும் ஏற்பட்டது.

இதனால் பயந்தபோன ராமச்சந்திரன் தரப்பினர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய படி கிடந்த மணிகண்டனை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் கதறி அழுது புரண்டனர். இதற்கிடையே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கத்தி குத்தில் காயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாமக்கல் போலீசார் ராமச்சந்திரன், கருணாமூர்த்தி, ராஜேஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகுமான், ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, தனபால் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மணிகண்டன் கொலை செய்யப்பட்டதால் தூசூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இதனால் நாமக்கல் போலீசார் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரசிகர் மன்ற தலைவர் பிரச்சினையில் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News