செய்திகள்

திருவண்ணாமலை அருகே பருவதமலை பக்தர்களிடம் வழிப்பறி செய்த சென்னை வாலிபர்கள் கைது

Published On 2017-01-30 05:29 GMT   |   Update On 2017-01-30 05:29 GMT
திருவண்ணாமலை அருகே பருவதமலை பக்தர்களிடம் வழிப்பறி செய்த சென்னை வாலிபர்கள் 3 பேரையும் கடலாடி போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
திருவண்ணாமலை:

பருவதமலையில் உள்ள மல்லிகார்ஜூன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரம் உள்ள பருவத மலையில் மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும் இல்லாமல் வெளியூர் பக்தர்களும் வந்து தரிசனம் செய்கின்றனர்.

கடந்த 27-ந்தேதி பருவதமலைப் பாதையில் கடை வைத்துள்ள மோகன் என்பவரிடம் 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த பொருட்கள் மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

மேலும் அவர்கள் பக்தர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையறிந்த மோகன் கிராம மக்கள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து கடலாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் சென்னை தாம்பரம் அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ்(வயது20), விக்னேஷ்(18), செல்வம்(20) என தெரியவந்தது. இவர்கள் பருவதமலை மீது ஏறி கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கடலாடி போலீசார் 3 பேரையும் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Similar News