செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த புதிய மசோதா: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது

Published On 2017-01-23 12:39 GMT   |   Update On 2017-01-23 12:39 GMT
சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேறியுள்ளது.
சென்னை;

ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிகமாக இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு பதிலாக புதிய நிரந்தர சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட முன்வரைவை தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்தினர்.
இதனால், அதை தொடர்ந்து தமிழக அரசு நேற்று முன்தினம் அவசர சட்டம் பிறப்பித்தது.

இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க அதன் சட்ட வடிவு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்கான சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில்  தொடங்கியது. விலங்குகள் வதைத் தடுப்பு சட்ட திருத்த முன் வடிவினை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து மசோதா குறித்து பேசினார்.

இந்த சட்ட முன் வரைவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக புதிய சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

Similar News