செய்திகள்

வேலூரில் 4-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி மவுன புரட்சி போராட்டம்

Published On 2017-01-21 10:15 GMT   |   Update On 2017-01-21 10:15 GMT
வேலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு இளைஞர்கள், மாணவ, மாணவிகள் 4-வது நாளாக தமிழ் உணர்ச்சியுடன் எழுச்சிமிகு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு இளைஞர்கள், மாணவ, மாணவிகள் 4-வது நாளாக தமிழ் உணர்ச்சியுடன் எழுச்சிமிகு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு, பகல் பாராமல் கொட்டும் பனியில் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம், குடும்பாக போராட்ட களத்தில் குவிந்துள்ளனர்.

‘‘வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம்’’, ‘‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’’ என்ற கோ‌ஷம் போராட்ட குணத்தின் தமிழ் உணர்வை காட்டுகிறது.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டி மவுன புரட்சி செய்தனர்.

மவுன புரட்சி போராட்டத்தில் "நாம் பேச வேண்டாம் அரசை பேச வைப்போம்" என்ற பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

வேலூர் மக்கான் சிக்னல் அருகே அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி நர்சுகள், நர்சிங் மாணவிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை ஆஸ்பத்திரி முன்பு திரண்டு போராட்டம் செய்தனர்.

வேலூர் அடுத்த மேல்மொணவூர் அகதிகள் முகாமில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் ஜல்லிக்கட்டு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் அடுத்த மின்னூரில் இளைஞர்களின் தொடர் போராட்டம் நடக்கிறது. துத்திப்பட்டு ஷூ கம்பெனி தொழிலாளர்கள் 1500 பேர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றனர்.

ஆம்பூர் அடுத்த சின்னப்பல்லி குப்பத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சுமார் 400 பேர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முகாமில் உள்ள இலங்கை அகதிகள் ஒட்டு மொத்தமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் அருகே சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பிரயதர்ஷினி கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவர்கள் 4-வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டும் வகையில் போராடி வருகிறார்கள்.

குடியாத்தம், திருப்பத்தூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காட்டிலும் 4-வது நாளாக இன்றும் போராட்டம் நடந்தது.

திருவண்ணாமலையில் இன்று வாயில் கருப்பு துணி கட்டி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மவுன போராட்டம் செய்தனர். ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், போளூரிலும் 4-வது நாளாக போராட்டம் நடந்தது.

கண்ணங்கலம் அடுத்த ஒண்ணுபுரத்தில் கிராம மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

Similar News