செய்திகள்
ராணுவ வீரர் செல்வக்குமார்

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் மக்களாட்சி: போராட்டத்தில் ராணுவ வீரர் பேச்சு

Published On 2017-01-20 10:01 GMT   |   Update On 2017-01-20 10:01 GMT
மக்களின் விருப்பதை நிறைவேற்றுவதுதான் மக்களாட்சி, மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அரசோ, நீதிமன்றமோ இருக்கக்கூடாது என்று மதுரை போராட்டத்தில் ராணுவ வீரர் பேசினார்.
மதுரை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை கட்டபொம்மன் சிலை அருகே நேற்று மதியம் முதல் விடிய, விடிய போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை நடந்த போராட்டத்தில் மாணவ-மாணவிகள், பெண்கள், ஆசிரியர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், முதியவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்க ளது கருத்துக்களை பேசினர். மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் செல்வக்குமார் என்பவர் ராணுவ உடையில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

நான் ராணுவ வீரராக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். மாணவர்கள் தன்னலம் கருதாது தமிழர்களின் பாரம்பரியத்திற்காக நடத்தி வரும் இந்த போராட்டத்தில் இந்தியனாக, தமிழனாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் மக்களாட்சி. மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அரசோ, நீதிமன்றமோ இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ வீரர் செல்வக்குமாரின் பேச்சை மாணவர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இஸ்மாயில் பேசுகையில், மாணவர்கள் நடத்தும் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தி மாணவர்கள் கேட்பார்கள். தற்போது மாணவர்கள் பாடம் நடத்தி ஆட்சியாளர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஓரிருநாட்களில் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். அதுவரை நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார்.


Similar News