செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து விழுப்புரத்தில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

Published On 2017-01-20 09:37 GMT   |   Update On 2017-01-20 09:37 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விழுப்புரத்தில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

“உலகுக்கே எடுத்துக்காட்டாய் அமைதியாக போராட தெரிந்தவன் தமிழன்” என்ற நற்பெயரை ஜல்லிக்கட்டு போராட்டம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கு பெற்று தந்துள்ளது.

கலவரம், வன்முறையின்றி பாரம்பரியத்தை காக்க ஒற்றுமையுடன் ஒன்றுகூடிய இளைஞர்களின் வீரப்பயணம் 3-வது நாளையும் கடந்து இன்றும் தொடர்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரம் செல்ல... செல்ல... இளைஞர்கள், குழந்தைகள், பொதுமக்கள் என கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. இதனால் அந்த திடலே தத்தளித்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் வலுபெற்றது.

இரவில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், கடுங்குளிரையும் தாங்கி மாணவர்கள் திறந்த வெளியிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள், ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரை போராட்டம் ஓயாது. பீட்டா அமைப்பை முழுவதுமாக தடை செய்யும் வரை எங்களது தாகம் தீராது என்று முழக்கமிட்டனர்.

அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சமூக ஆதரவாளர்களும், மாணவர்களின் பெற்றோரும் வழங்கினர். இன்றும் 3-வது நாளாக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. காலை முதலே சாரை சாரையாக திடலை நோக்கி பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள், மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் இன்று காலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் சட்ட சிக்கலை உடைப்போம், சரித்திரம் படைப்போம், பீட்டாவை தடை செய், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே நீக்க வேண்டும் என்பன போன்ற கோ‌ஷங்களை எழுப்பினர்.

உளுந்தூர்பேட்டையில் மணிக்கூண்டு திடலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து 3-வது நாளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மணிக்கூண்டு திடலுக்கு வந்து ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நேற்று மாலை மணிக்கூண்டு திடலுக்கு வந்த உளுந்தாண்டர்கோவில் பகுதியை சேர்ந்த பாரம்பரிய சிலம்பாட்டம் நடத்தும் குழுவினர் 2 காளைகளை கொண்டு வந்தனர். சென்னை-திருச்சி சாலையில் காளைகளை வைத்து மஞ்சு விரட்டு நடத்தினர்.

மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தங்களது உடலில் காளைகளின் உருவப்படத்தை வரைந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திண்டிவனம், மரக்காணம், திருக்கோவிலூர் உள்பட பல பகுதிகளிலும், மாணவர்கள், இளைஞர்களின் போராட் டம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News