செய்திகள்

திண்டுக்கல்லில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

Published On 2017-01-19 11:53 GMT   |   Update On 2017-01-19 11:53 GMT
ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து திண்டுக்கல்லில் இன்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது.
திண்டுக்கல்:

ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் ஒன்று கூடிய மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இரவு முழுவதும் அதே இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்த அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றும் நகராமல் அதே இடத்தில் அறவழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று திண்டுக்கல் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் அப்பகுதியில் கூடி போராட்டத்தை வலுப்படுத்தினர். பல்வேறு அமைப்பினர் மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கொட்டும் பனியில் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். இன்று 3-வது நாளாக அதே இடத்தில் போராட்டம் நீடித்து வருகிறது.

நேற்று அனுமதியின்றி போராட்டத்தில் கலந்து கொண்ட தனியார் கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் எச்சரித்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அபராதம் மற்றும் ஒரு வாரம் சஸ்பெண்டு நடவடிக்கை பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர். அதனை பொருட்படுத்தாது மாணவர்கள் உற்சாகத்துடன் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பலர் உணவு, தண்ணீர் பாக்கெட், பிஸ்கட் போன்றவற்றை வழங்க முன் வந்தனர். ஆனால் அதனை வாங்க மாணவர்கள் மறுத்து விட்டனர். அரசியல் கட்சி பிரதிநிதிகள் உணவு பொருட்கள் வழங்க முன் வந்த போது அவர்களிடம் மாணவர்கள், எங்களை ஏன் பிச்சைக்காரர்கள் ஆக்குகிறீர்கள்? என கேட்டனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எந்தவித அரசியல் தூண்டுதலும் இல்லாமல் தமிழர் உணர்வுகளை மதித்து நடக்கும் போராட்டம் என பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

Similar News