செய்திகள்

நாகர்கோவிலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் விடிய விடிய போராட்டம்

Published On 2017-01-19 04:58 GMT   |   Update On 2017-01-19 04:58 GMT
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி நாகர்கோவிலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் வடசேரி அண்ணா ஸ்டேடியம் முன்பு நேற்று காலையில் திரண்ட கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். அப்போது சுமார் 50 மாணவர்களே இருந்தனர்.

நேரம் செல்ல செல்ல 50, 500 ஆக மாறியது. பிற்பகலுக்கு மேல் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியது.

மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் இணைந்தனர். அவர்கள் எழுப்பிய கோரிக்கை முழக்கம் நாகர்கோவிலை அதிர வைத்தது.

நாகர்கோவிலில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக ராமன்புதூர், தக்கலை, குளச்சல் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற அனைவரும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றே கோ‌ஷமிட்டனர். இப்போராட்டங்கள் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராமிலும் வேகமாக பரவியது. இதனால் போராட்டத்திற்கு ஆதரவு குவிந்த வண்ணம் இருந்தது.

நேற்று மாலையுடன் போராட்டம் முடிவுக்கு வருமென போலீசார் எதிர் பார்த்தனர். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எந்த தகவலும் வராததால் போராட்டக்காரர்கள் அண்ணா ஸ்டேடியம் முன்பிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.

அவர்கள் விடிய விடிய அங்கேயே தங்கியிருந்தனர். போலீசார் ஸ்டேடியம் முன்பு தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தனர்.

இன்று காலையில் மீண்டும் ஸ்டேடியம் நோக்கி ஏராளமான மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களுடன் கரம் கோர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

குமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. ஆனால் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டக் களத்தில் குதித்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களோடு சில அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்தனர். அவர்கள் கட்சி கரை வேட்டியுடன் இருந்தனர். இதைக்கண்ட மாணவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களை போராட்டக் களத்தில் இருந்து வெளியேறுமாறு கோ‌ஷமிட்டனர்.

போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். தமிழன் என்ற உணர்வுடன் கலந்து கொண்டால் போதும். அதற்கு கரை வேட்டியை மாற்றி விட்டு சாதாரண உடையுடன் தமிழனாக கலந்து கொள்ளுங்கள், என்றனர்.

இதனால் போராட்டத்திற்கு வந்த அரசியல் பிரமுகர்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர்களில் சிலர் சாதாரண உடை அணிந்து மீண்டும் களம் புகுந்தனர்.

மாணவர்களுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் இன்று நாகர்கோவில் வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர். இதுபோல இன்னும் பல அமைப்புகள் இன்று ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தையொட்டி நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆயுதம் தாங்கிய போலீசாரும், ஸ்டேடியம் முன்பு நிறுத்தப்பட்டனர்.

Similar News