செய்திகள்

அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது: அமைச்சர் காமராஜ் பேச்சு

Published On 2017-01-18 13:48 GMT   |   Update On 2017-01-18 13:48 GMT
ஆயிரம் கருணாநிதி வந்தாலும் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது என்று அமைச்சர் காமராஜ் பேசினார்.

திருவாரூர்:

திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குஅ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணிகண்டன், ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், பாலாஜி, ரயில் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் பேசியதாவது:-

அ.தி.மு.க. என்பது எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு தொண்டர்களால் நிறைந்திருக்கும் இயக்கம். மக்களுக்காக எம்ஜிஆர்,, ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்ட இயக்கம் மக்களின் பசிப்பினியை போக்கிய தலைவர்களாக அ.தி.மு.க. தலைவர்கள் விளங்குகிறார்கள்.

மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவை 33 ஆண்டுகளாக கண்ணை இமை காப்பதுபோல் காத்து பாதுகாத்தவர் சசிகலா. ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது சர்வதேச அளவில் உயர்ந்த மருத்துவர்களை கொண்டு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை உடைத்து விடலாம் என கனவு காண்கின்றனர். அ.தி.மு..க.வை உடைக்க நினைப்பவர்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு சசிகலாவின் வலுவான தலைமை கிடைத்துவிட்டது. இதனால் தி.மு.க.வினர் பொறாமையில் உள்ளனர்.

ஆயிரம் கருணாநிதி வந்தாலும் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது. தியாக உணர்வு கொண்ட பெண் அ.தி.மு.க.விற்கு தலைமைப் பதவிக்கு வந்துள்ளார். அதனால் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் நூர்ஜகான் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தின் நிறைவில் எம்.ஜிஆர். நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அ.தி.மு.க சார்பில் தையல் எந்திரம், குடம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், வேட்டி சேலை, மரக்கன்று ஆகியவை வழங்கப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பாப்பாத்திமணி, கலியபெருமாள், விஜயராகவன், சூரியசாமி, நாகராஜ், செந்தில், கருப்பையன், செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

முடிவில் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் துரை நன்றி கூறினார்.

Similar News